Tuesday, June 8, 2010

வள்ளுவர் தாசன்

வள்ளுவர் தாசன்
முன்னுரை

இது ஒரு திருக்குறள் பற்றிய நாடகம். குறள் பெருமையையும் குறள் படிக்க வேண்டிய அவசியம் பற்றியும் சொல்லும் நாடகம். சரியாக படிக்காத, வேலைக்கு ஏதும் செல்லாமல் இருக்கும் கபாலி, திருவள்ளுவர் அருளால் எப்படி குறள் மீதும், தமிழ் மீதும் பற்று கொள்ளும் அளவுக்கு வள்ளுவர் தாசனாக மாறினார் என்பதைக் காட்டும் ஒரு நாடகம்.

அறிவிப்பாளர்:

இது வள்ளுவர் தாசன் பற்றிய வரலாற்று நிகழ்ச்சி. நம்ம கபாலி சரியா படிக்காதவர். வேலைக்கு எல்லாம் போறது இல்லேங்க. அப்படி இருந்த கபாலி எப்படி வள்ளுவர் தாசனா மாறினார் என்பது தான் கதை.

திருவள்ளுவர் நேரில் வந்து அருள் கொடுத்தா எப்படி இருக்கும் என்று போகிறது கதை.
அது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு நல்லாவே கேட்கிறது.

கற்பனையும் பொய்யும் கலந்ததுதாங்க காவியம். இது எல்லாம் இல்லாம எப்படி ஒரு நாடகம் போட்றதுன்னு தெரியலங்க.

சரிங்க, நாடகத்தை பார்த்து ரசிங்க.

காட்சி 1
வள்ளுவர் சிலை (மாணவர்)
நான்கு மாணவர்கள் வள்ளுவரை வனங்குகின்றனர்.

பின் கண்ட பாடல் இசைத்தட்டில் ஒலிக்கிறது.
(படம்: இம்சை அரசன்)
ஆண்டவன் நீயே ஆள்பவனும் நீயே
நீண்ட புகழ் மேவி நின்றவனும் நீயே
அன்னையும் நீயே அப்பனும் நீயே
என்னைப் புறம் காக்கும் இறைவனும் நீயே
(பாட்டு முடிகிறது)


மா 1, 2, 3, 4:


உலகப் பொதுமறைத் தந்த ஐயனே!
இரண்டு அடிகளில் முப்பால் அருளிய ஞானியே!
குறள் தந்து தமிழுக்கு பெருமையூட்டிய தெய்வப் புலவரே!
எங்களை வாழ்த்துங்கள் திருவள்ளுவரே!
மா 1:
திருக்குறள், திருவள்ளுவர் என்று சொன்னாலே,
எவ்வளவு பெருமையா இருக்கு பார்த்தயா?
மா 2:

உண்மைதான்.
திருக்குறள் மாதிரி வேறு ஏதாவது இந்த உலகத்துல இருக்கா என்பது சந்தேகம்தான்
மா 3:
ரொம்ப சரியா சொன்னே.
ஒரு ஐடியா!
இப்ப திருவள்ளுவர் நம் முன்னால் வந்தால் எப்படி இருக்கும்?
மா 4:

அவர் 2042 (2000?) வருஷம் முன்னால் வாழ்ந்தார்.
இப்ப எப்படி நம் முன்னால் வருவார்?
மா 1:




2 ஆயிரம் வருஷத்துக்கு முன்னால வாழ்ந்திருந்தாலும்,
இன்னும் 2 கோடி வருஷத்துக்கும் நம்மோட வாழப்போறாரு.

அதோட....

உலகத்துல எவ்வளவோ அதிசயங்கள் நடக்குதுன்னு சொல்வாங்க.
திருவள்ளுவர் நம்ம முன்னால வர்றதும் நடக்கலாம் இல்லையா?
மா 2:எந்த அதிசயம் பற்றி சொல்றே?
மா 3:









பல அதிசயங்கள் நடந்திருக்கு.
இப்ப நடக்கற ஒண்ணு பத்தி செல்றேன் கேளு.

அமெரிக்காவில கலிஃபோர்னியா என்னும் ஒரு மாநிலம் இருக்கு.
அங்க கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ன்னு ஒரு தமிழ்ப் பள்ளி இருக்கு.
அந்த பள்ளியில நூற்றுக் கணக்கான தொண்டூழியர்கள்
ஞாயிற்றுக் கிழமையில்
ஆயிரக் கணக்கான பிள்ளைகளுக்கு தமிழ்க் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இது பெரிய அதிசயம் இல்லையா?
மா 4:நிச்சயமா. இதுவும் ஒரு பெரிய அதிசயம் தானே!
மா 1:
அப்படின்னா திருவள்ளுவரும் நம் முன்னால வர்ற வாய்ப்பு இருக்குன்னு சொல்றியா?
மா 2:
நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் எதுவும் சாத்தியமே!.
சரி வள்ளுவரை போற்றி ஒரு பாட்டு பாடலாம்.
மா 3:








பாட்டு:

(ஒன்றே குலமென்று பாடுவோம் மெட்டில்)
அகர முதல எழுத்தென்று பாடுவோம் - உலகில்
ஆதி பகவன் முதற்றே உலகென்று ஓதுவோம்

மலர்மிசை ஏகினார் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் (அகர)



காட்சி 2

வள்ளுவர் எழுந்து வருகிறார்.
மா 3, 4:( வள்ளுவரைப் பார்த்து மயக்கம் போட்டு விழுகிறார்கள் )
மா 1, 2:



( வள்ளுவருக்கு வணக்கம் சொல்கிறார்கள் )
வணக்கம் ஐயா, வணக்கம்.
உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம்.
வ:



வாழ்த்துகிறேன். நலமுடன் வாழுங்கள் குழந்தைகளே.

என்னை ச்நதிக்க நீங்கள் விரும்பியது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?
மா 3, 4:
(மயக்கம் தெளிந்து எழுகின்றனர்.
வள்ளுவரைப் பார்த்து மீண்டும் மயக்கம் அடைகின்றனர்)
மா 1, 2:
ஐயனே, தங்களிடம் கேட்க எவ்வளவோ இருக்கிறது.
தங்களைப் பார்த்த வியப்பில் எதுவும் பேச வரவில்லை
மா 3, 4: (மீண்டும் எழுந்துக்கொள்கிறார்கள்)
மா 1, 2:(அவர்களை மீண்டும் விழுந்துவிடாமல் பிடித்துக்கொள்கிறார்கள்)


( கபாலி வருகிறார் )
க:


இன்னா பசங்களே. இங்கே இன்னா பண்றீங்க?


ஹ்ம். யாருபா இந்த சாமியாரு?
மா 1:இவர்தான் திருவள்ளுவர்.
க:


இன்னாது, திருவள்ளுவரா?

சாமி, உன்னைப் பாத்துதான் நறுக்குன்னு ஏழு வார்ததை கேக்கலாம்னு இருக்கிறேன்.
மா 2:
நறுக்குன்னு நாலு வார்த்தைன்னுதானே சொல்வாங்க.
அது என்ன ஏழு வார்த்தை
மா 3:குறளில் 7 வார்த்தைகள் இருக்கு இல்லையா.
அதைச் சொல்றார்னு நினைக்கிறேன்.
வ:

ஐயா, நீங்கள் என்னிடம் என்ன கேட்க வேண்டும்?
நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்?
வேலைக்கு போகவில்லையா?
க:
என்னாது? வேலைக்கா?
எவன் வேலை கொடுப்பான் எனுக்கு?
வ:ஏன்?
க:நான்தான் படிக்கவே இல்லியே?
வ: படிக்கவில்லையா? ஏன்?
க:
நல்லா கேட்டே வாத்யாரே கேள்வி
எல்லாம் உன்னாலதாம்பா
மா 4:
ஐயா, பெரியவங்க கிட்ட பேசும்போது மரியாதையா நீங்க வாங்க என்று பேசவேண்டும்.
க:

கொய்ந்தே, நீ இங்க்லீஷ் படிச்சி கீறே.
அதனால, உனுக்கு மரியாதை எல்லாம் தெரியுது
டமில்லெ அதெல்லாம் இல்லை தெரியுமா?....
மா 1:

என்னது? தமிழ்லே அதெல்லாம் இல்லையா?
English-லேதான் அது மாதிரி இல்லை.
தமிழில் தான் நெறய இருக்கு
க:அப்படீன்றே
வ:சரி ஐயா, நீங்கள் ஏன் படிக்கவில்லை என்று சொல்லவில்லையே...
க:எல்லாம் உன்னாலதாம்பா...
வ:என்னாலா? எப்படி?
க:

இன்னா வாத்தியாரே, நீ பாட்டுக்கு குறள் எழுதி வச்சிட்டு பூட்டே
இந்த வாத்யாருங்க குறளை படி படின்னு தொந்தரவு செய்தாங்க
அத்தான் இஸ்கூலுக்கே வாணாம்னு உட்டுட்டேன்.
வ:எத்தனை குறளகள் படிக்கச் சொன்னார்கள்?
க:ஒரே வருஷத்துல 10 குறள் படிக்க சொல்றாங்கபா
மா 2:
ஐயா, 10 குறளை ஒரு வருஷத்துல படிக்க கஷ்டப்பட்டீங்க

ஆனா, அவர் 1330 குறளை நமக்காக கொடுத்து இருக்கிறார்.
மா 3:
அப்படின்னா அவரு எவ்வளவு பெரிய ஞானியா இருக்கனும்.
யோசித்துப் பாருங்க.
க:




கொய்ந்தே, படா ஷோக்கா சொன்னே நீ....
எழுதறது ரொம்ப easy-மா.
அந்த காலத்துல இஸ்கூலு இல்லை.
அதனால, இவரை யாரும் குறள் படிக்கச் சொல்லல.

படிக்க சொல்லி இருந்தா, அப்ப தெரிஞ்சி இருக்கும் இவருக்கு.
மா 4:உங்களை திருத்தவே முடியாது
க:





கரீட்பா.
என் வாத்யார்கூட அதான் சொன்னாரு.
அதுக்கு நான் சொன்னேன்....
உன்னால என்னையே திருத்த முடியலேன்னா
என் பரிட்சை பேப்பரை எப்டி திருத்துவேன்னு
சொல்லிட்டு கபால்னு வந்துட்டேன்.
வ:



ஐயா, நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
க:அப்படீன்னா
வ:
ஒரு வேலையை இப்படி செய்யலாம் என்று சொல்வது எளிது.
ஆனால் சொன்னது போல செய்வது கடினம்.
க:அப்படி வா சாமி வழிக்கு
வ:





நீங்கள் நல்ல மனிதர்.
உங்களுக்குத் நல்ல மனம் உள்ளது.
உங்களுக்குத் தேவையானது ஒரு நல்ல வழி முறை
உங்கள் நல்ல மனதை பயன்படுத்தி
உங்களுக்கும் மற்றவர்களுக்கும்
பயன் படும்படியான வழிமுறை உங்களுக்குத் தேவை.
க:

ஆமாம் சாமி.
நல்ல சொல்தான் சொல்றே.
ஆனா, அதுக்கு வழி இன்னான்னுதான் தெரியலியே.
வ:



கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

அதாவது குறளை நன்றாக படியுங்கள்.
பின்பு அதில் சொல்லி உள்ளது போல் நடந்துக்கொள்ளுங்கள்.
க:



( கபாலிக்கு மூளையில் மின்னல் )
ஐயா, ஏதோ புரிந்தது போல இருக்கு
ஆனா முழுசா விளங்கல.
வர்ட்டா.... நாளைக்கு வந்து பாக்கறேன்.

( இசைத்தட்டில் பாட்டு. AVM-மின் ஆரம்ப குறள் இசை )
அகரமுதல எழுத்தெல்லாம்...
கபாலி யோசித்துக்கொண்டே செல்கிறார்.



காட்சி 3
கபாலி வீட்டில்
முனியம்மா:க ரவி, க ரவி...
ர:
அம்மா, என்னை ரவின்னு கூப்பிடு
இல்லைன்னா, K ரவின்னு கூப்பிடு
மு:
ஏன்? உங்க அப்பா பேரு கபாலி
அத்தான் க ரவி ன்னு தமிழ்லே கூப்டேன்
ர:
இல்லைம்மா. நீ க ரவின்னு குப்பிடறது
ஏதோ கன்றாவின்னு கூப்பிடற மாதிரி இருக்குதுமா
மு:

பரவால்லை உடு.
சரி, உங்கப்பா எழுந்துக்கற சத்தம் கேக்குது.
நீ சீக்கிரம் இஸ்கூலுக்கு கிளம்பு.
ர:ஏம்மா சீக்கிரம் போகச் சொல்றே?
மு:



இல்லை கண்ணு.
அது எழுந்திச்சின்னா
"நீ இன்னாடா படிச்சிட்டு பெரிய MLA வேலைக்கா போவப் போறேன்னு"
பெரிய புத்திசாலி மாதிரி கேள்வி கேட்கும்
ர:சரிம்மா, நான் புறப்பட்றேன்.
மு:

சரி கண்ணு.
உங்கப்பா மாதிரி இல்லாம
நீயாச்சும் ஒழுங்கா படி
க:( கபாலி தமிழறிஞர் உடையில் வருகிறார் )
மு:ஐயே, இன்னா இது புது வேஷம்?
க:இது வேடம் இல்லை முனியம்மா.
இது என் புதிய உடை
மு: ஐயோ, ஐயோ.
இன்னாத்துக்கு இப்படி புரியாத பாஷையெல்லாம் பேசறே.
க:



என்னது? புரியாத மொழி பேசுகிறேனா?
இதுதான் தமிழ்.

அழகுத்தமிழ் இருக்க மொழிகலந்து சென்னைத்தமிழ் பேசுதல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
மு:

ஐயய்யோ. உன்னை காத்து கறுப்புதான் அடிச்சி இருக்குதுன்னு நினைக்கிறேன்.

க ரவி, நீ போய் மந்திரவாதியை கூட்டுக்கினு வாடா...
க:
முனியம்மா. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.
இன்று இரவு முழுதும் நான் குறள் படித்து என் மனம் தெளிந்தேன்.
மு:க ரவி, நீ இஸ்கூலுக்குப் போ. போய், நீயாச்சும் நல்ல தமிழா படி.
ர:இரும்மா, அப்பாவுக்கு என்ன ஆச்சின்னு பாத்துட்டு போறேன்.
க:












மகனே,

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

உன் அம்மா சொல்வதைக் கேள்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்


என்பது போல, என் பெயர் சொல்லும்படி நன்றாக படி.
தமிழையும் நன்றாகப் படி.
ர:
சரிம்மா, சரிப்பா, நான் வர்றேன்
( ரவி செல்கிறான் )
மு:
ஐயோ, இந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே.
நான் என்ன செய்வேன். தெரியலியே...
க:





முனியம்மா, கவலைப் படாதே.

எனக்கு வள்ளுவர் அருள் கிடைத்துள்ளது.
இரவு முழுதும் குறளைப் படித்தேன்.
நிறைய விஷயங்கள் எனக்குப் புரிகிறது.
மேலும் நிறைய குறள் படிக்க ஆசையாக உள்ளது.
மு:
என்னா....து...? இந்த வயசுல குறள் படிக்கனுமா?
அதுக்கு துட்டுக்கு எங்க போறது?
க:






இல்லை முனியம்மா,
எவ்வளவு வயது ஆனாலும் பரவாயில்லை.
எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை.
எல்லோரும் குறள் படிக்க வேண்டும்.
குறள் படிக்கவில்லை யென்றால்,
நாம் ஒரு பெரிய வாய்ப்பை இழந்து விடுவோம்.
மு:


சரியா போச்சி...
நம்ம பையனுக்கு இஸ்கூல் ஃபீஸ் கட்டவே காசு இல்லை.
நீ எப்படி படிப்பே?
க:

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இலவசமாக
திருக்குறள் படிப்பு சொல்லித் தருகிறார்கள்.
அதில் சேர்ந்து படிக்கப் போகிறேன்.
மு:
நீ பேசறதப் பார்த்தா சந்தோஷமா தான்யா இருக்குது.
ஆனா, கொஞ்சம் பயமா இருக்குதுய்யா...
க:
பயப்படாதே.
நான் போய் வள்ளுவரை வணங்கிவிட்டு வருகிறேன்.
மு:சரிய்யா



காட்சி 4
வள்ளுவர் சிலை அருகே.
மாணவர்கள், கபாலி
மா 1:



நேற்று என்ன நடந்தது பார்த்தியா?
கபாலி என்பவர் வள்ளுவரிடம் மரியதையா பேசவில்லை.
இருந்தாலும் வள்ளுவர் எவ்வளவு பொறுமையாக இருந்தார் கவனிச்சியா?
மா 2:






ஆமாம். அதைத்தான்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

என்றாரோ?
மா 3:








அதுமட்டும் இல்லை.

கபாலிக்கு நல்ல வழிகளும் சொன்னாரே.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்


என்பது போல.

( கபாலி வருகிறார் )
மா 4:
ஐயா, நீங்கள் ஒரு தமிழறிஞர் போல் இருக்கிறீர்கள்.
நீங்கள் யார் ஐயா?
க:

குழந்தைகளே, என்னைத் தெரியவில்லையா?
நான்தான் நேற்று உங்களைச் சந்தித்தேனே..
என் பழைய பெயர் கபாலி
மா 1:
ஐயா, நீங்களா?
உங்களை இப்படிப் பார்க்க எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா?
க:
குழந்தைகளே, என் கண்ணை திறந்து விட்டீர்கள்.
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரிய வில்லை.
மா 2:
ஐயா நீங்கள் எங்களை விட பெரியவர்.
உங்களுக்கு நாங்கள் சொல்வதா?
க:




குழந்தைகளே,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று நம் ஐயன் சொல்லி இருக்கிறாரே.
மா 3:ஐயா அதன் பொருள் என்ன?
க:









யாராவது நமக்கு ஏதாவது சொன்னால்
அதன் பொருளைத்தான் பார்க்க வேண்டுமே தவிர
அதை யார் சொன்னர்கள் என்று பர்ர்க்கக்கூடாது

என்றும் பொருள் கொள்ளலாம்.

உங்களால், குறளின் பெருமையை அறிந்தேன்.
வள்ளுவர் மீது பக்தி கொண்டேன்.
அவர்மேல் கொண்ட பற்றால்,
என் பெயரையும் "வள்ளுவர் தாசன்" என்று மாற்றிக்கொண்டேன்.
மா 4:

மிக்க மகிழ்ச்சி ஐயா.
எல்லோரும் உங்களைப் போலவே குறள் படித்தால்
இவ்வுலகம் எவ்வளவு பயனடையும்.
க:

சரியாகச் சொன்னீர்கள் குழந்தைகளே.

ஒரு பாட்டு பாடத் தோணுகிறது.





( குறள் பாட்டோடு நிகழ்ச்சி முடிகிறது )

சொல்ல சொல்ல இனிக்குதையா - ஐயனே
உள்ளமெல்லாம் உன் குறளை
சொல்ல சொல்ல இனிக்குதையா
எல்லோரும்:நன்றி!

நிறைவு!

No comments:

Post a Comment